முக்கிய தகவலை வெளியிட்ட ஜனாதிபதி -பயணத்தடையை தளர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டமை ஏன்??

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடையை கடந்த 14ஆம் திகதி தளர்த்துவதாக அறிவிக்கப்பட்ட போதும், அதில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.

இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி இந்தத் தகவல் வெளியிட்டார்.

Next Post

யாழில் இரு வேறு இடங்களில் நகரில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது...!!

Fri Jun 18 , 2021
Post Views: 498 பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதன்படி யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள லங்கா ரைய்லஸ்ஸ் நிறுவனத்தினுள் நுழைந்து ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன. இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது 29 […]

Today Political Cartoons of Sri Lanka