யாழ்ப்பாணத்தில் இப்படியொரு வைத்தியரா? அதிசயிக்கும் மக்கள்!!!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் துணைக்குச் சென்றிருந்தேன். எனது பணப்பையில் ரூபா.500, ரூபா.1000 எனப் பல நோட்டுகள் இருந்தாலும் கையில் ரூபா. 5000/- ஐ எடுத்து ஆயத்தமாக வைத்துக் கொண்டேன்.

( ரூபா.1500 க்கு அதிகமாக வரலாம் என்பதேஎனது எதிர்பார்ப்பு) அந்த வைத்தியசாலைக்கு எமது விஜயம் அதுவே முதல் தடவை என்றதால் வைத்தியரின் ஆலோசனைக் கட்டணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வைத்தியசாலையின் காசாளர் கரும பீடத்தை நெருங்கினேன். வைத்தியரின் கட்டணம் பற்றி விசாரித்தேன். ரூபா 500.00 ஐ செலுத்துமாறு காசாளர் கூறினார். நான் அதிர்ந்து போனேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்குரிய கட்டணமாக ரூபா 1000அல்லது அதற்கு மேலேயே தான் அறவிடுவது வழக்கம். அப்படியாயிருக்கும்போது போது ஏன் இவர்கள் வெறும் 500 ஐ அறவிடுகிறார்கள்? ஒரு வேளை தவறாகச் சொல்லிவிட்டாரோ அவர்? எனக்குள் எழுந்த கேள்வி இது. “அம்மா! 1500 ரூபாவா?” என்று நான் கேட்டேன். “இல்லை! வெறும் 500” என்றார் அவர். “என்ன 500 ஆ?அதுவும் இந்த மிக திறமைமிக்க புற்று நோய் வைத்தியருக்கு ஏனைய வைத்தியர்களின் கட்டணத்தின் அரைவாசியா? என்னால் நம்ப முடியவில்லை. கேட்டு விட்டேன். அது மட்டுமல்லாது பொதுவாகத் தனியார் வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்க்கவரும் பெரும்பாலான வைத்தியர்கள் குறித்த நேரத்துக்கு வருவதில்லை என்பது வரலாறு.

அவர்கள் நோயாளரைப் பார்வையிடும் நேரமாக அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் இருந்து அரை மணித்தியாலமோ அல்லது ஒரு மணித்தியாலமோ தாமதித்து வருவதுதான் வழமை. ஆனால் இந்த வைத்தியர் குறித்த நேரத்துக்குள் வந்தார். அதுவும் தமிழர் பாரம்பரிய உடையில். ஆச்சரியத்தால் என் கண்கள் அகல விரிந்து கொண்டன.

வந்த வைத்தியர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கவில்லை என்பது தெரிந்தது. என்னோடு வந்தவரை மிகுந்த கனிவுடனும் கரிசனையுடனும் கவனித்தார். அவருக்கு இருக்கும் பிரச்சினைகள் அத்தனையையும் கேட்டுத் தெளிவு பெற்றார். மிகவும் கவனத்தோடு ஆலோசனை வழங்கினார். எமக்கு மட்டுமல்ல வந்த அனைவரையும் இவ்வாறுதான் நடத்தியதாகப் பின்னர் அறிந்து கொண்டோம்.

அன்று மட்டுமல்ல அந்த வைத்திய கலாநிதி என்றும் இவ்வாறுதான் நோயாளரை அணுகுவதாகச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எமக்கு அது இலவசமாக கிடைத்த மருத்துவ ஆலோசனை என்றே மனதில்பட்டது. 500.00 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனை என்பது இன்று நினைத்து பார்க்க முடியாதது. அதுவும் மருத்துவம் சேவை என்பதற்கு அப்பால் எப்போது வியாபாரமாகப் போய்விட்டதோ… அன்றே குறைந்த கட்டணம் என்ற விடயமும் பகல் கனவாகிவிட்டது.

சாதாரண மக்களாலும் செலுத்தக் கூடிய ரூபா.500 ஐத் தனது கட்டணமாக்கிக் கொண்ட அவர் என்னைப் பொறுத்தவரை வைத்திய சேவைக்கு முன் உதாரணமானவர் மற்றும் பல வைத்தியர்கள் பின் பற்ற வேண்டிய ஒருவர். அன்று இந்த வைத்தியர் தனது கட்டணமாக ரூபா 2000ம் அறவிட்டாலும் ஏற்றுக் கொண்டு செலுத்தியிருப்போம். ஏனெனில் அவர் திறமைமிக்கவர் என்பது ஊர் அறிந்த உண்மை. இவ்வாறு இந்த வைத்தியர் குறைந்த கட்டணம் அறவிடுவது என்பது “போதும்” என்ற ஞான நிலைக்கு ஒப்பானது.

தங்கத்தை தட்டில் வைத்து “எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னாலும் “வேண்டாம்” என்று மறுப்பவராகவே அவர் எனக்குத் தோன்றினார். சினிமாக்களில் தான் ஒரு ரூபா வைத்தியர் என்று பார்த்திருப்போம். நிஜவாழ்க்கையிலுமா? அப்போதே இவர் பற்றிப் பலருக்குச் சொல்ல வேண்டும் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.

அதுவே இவ் முகநூல் பதிவின் நோக்கமும். பல வறுமைப்பட்டவர்களுக்கு இவர் இலவசமாக சேவை வழங்குவதாகவும் பின்னர் அறிந்து கொண்டோம். மருத்துவம் “ஒரு சேவைக்கு உட்பட்டது” என்பதை இவ் வைத்தியர் செயலில் காட்டுகிறார். இவர் போன்றவர்களால் தான் எம் மண்ணில் மழையும் பொழிகிறது மரங்களும் வளர்கின்றன . இவர் போன்றவர்களே விருதுகளாலும் பாராட்டுக்களாலும் மெச்சப்பட வேண்டியவர்கள்.

Krishnasamy Iynkaran என்பவரால் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது.

Next Post

தாயுடன் விமானத்தில் சென்ற குழந்தை... அவர் அஸ்தியுடன் திரும்பிய சோகம் - கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

Fri Jun 18 , 2021
Post Views: 1,580 ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் அஸ்தியுடன் 11 மாத குழந்தை விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன். இவருக்கு பாரதி என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவனை பார்த்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்து […]

Today Political Cartoons of Sri Lanka